வினாத்தாள் வரிசை எண் மாறியதால் தேர்வர்கள் குழப்பம்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் வினாத்தாள் வரிசை எண் மாறியதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். தேர்வு தாமதமாக தொடங்கியதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் வினாத்தாள் வரிசை எண் மாறியதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். தேர்வு தாமதமாக தொடங்கியதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வு
தமிழக அரசுத்துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே 21-ந்தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி வெளியிட்டது. இதில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் திருச்சி மாவட்டத்தில் 3,628 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 55,071 பட்டதாரிகள் அடுத்தகட்ட முதன்மைத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதன்மைத்தேர்வு நேற்று காலை தொடங்கியது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் 18 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
மாறிய வரிசை எண்
நேற்று காலை 9.30 மணிக்கு தமிழ் தேர்வும், மதியம் 2 மணிக்கு பொதுத்தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வெளியூரில் இருந்து தேர்வர்கள் அதிகாலையிலேயே தேர்வுமையங்களுக்கு வந்து காத்திருந்தனர். தேர்வு மையங்களுக்கு செல்வதற்காக சிறப்பு பஸ்களும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருச்சி மாவட்டத்தில் 3,348 பேர் காலையில் நடந்த தமிழ் தேர்வில் கலந்து கொண்டனர். 280 பேர் கலந்து கொள்ளவில்லை. சரியான நேரத்தில் தேர்வர்களுக்கு வினாத்தாள்களும், விடைத்தாள்களும் கொடுக்கப்பட்டன. அப்போது, 18 தேர்வு மையங்களிலும் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் புத்தகத்தின் வரிசை எண்களும், விடைத்தாளில் உள்ள வரிசை எண்ணும் மாறி இருந்தன.
தேர்வர்கள் குழப்பம்
இதனால் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு தொடங்கவில்லை. இதன்காரணமாக தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவற்றை சரிசெய்து சரியான வரிசை எண் கொண்ட வினாத்தாள் வழங்க உத்தரவிட்டார்.
அத்துடன் தேர்வர்களுக்கு நிலைமையை எடுத்து கூறி, காலதாமதம் ஏற்பட்ட நேரத்தை கணக்கிட்டு, எவ்வளவு நேரம் தாமதம் ஏற்பட்டதோ அவ்வளவு நேரம் கூடுதல் நேரமாக வழங்க அறிவுறுத்தினார். அத்துடன் இதுபற்றி தேர்வு மையங்களுக்கு வெளியில் காத்திருந்த தேர்வர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் எடுத்துக்கூறப்பட்டது.
தாமதமாக தொடங்கிய தேர்வு
அதன்படி திருச்சி மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களிலும் காலையில் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை தாமதம் ஏற்பட்டது. அதற்கு தகுந்தார் போல் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதனால் மதியம் 12.30 மணிக்கு பதிலாக 1 மணி வரை தேர்வு முடிவடைந்தது.
காலையில் தேர்வு தாமதமாக முடிவடைந்ததால் மதியம் 2 மணிக்கு தொடங்க இருந்த பொதுத்தேர்வு 30 நிமிடம் தாமதமாக 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்வை 3,423 பேர் எழுதினர். 205 பேர் தேர்வு எழுத வரவில்லை.
----
Reporter : K.Eswaramoorthy_Staff Reporter Location : Trichy - Trichy