புதுப்பாளையம் கிளை கால்வாயை சீரமைத்து புதுப்பிக்கும் பணி தீவிரம்


புதுப்பாளையம் கிளை கால்வாயை சீரமைத்து புதுப்பிக்கும் பணி தீவிரம்
x

குடிமங்கலம் அருகே புதுப்பாளையம் கிளை கால்வாயை சீரமைத்து புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர்

குடிமங்கலம் அருகே புதுப்பாளையம் கிளை கால்வாயை சீரமைத்து புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுப்பாளையம் கிளைக் கால்வாய்

பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ்4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. புதுப்பாளையம் கிளை கால்வாய் மூலம் 2-ம் மண்டலத்தில் 7,219 ஏக்கர் 4-ம் மண்டலத்தில் 7,310 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பிரதான கால்வாயில் இருந்து பூசாரிப்பட்டி ஷட்டரில் பிரிந்து 40 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த கால்வாய் அமைந்துள்ளது.

ஆங்காங்கே ஷட்டர்கள் அமைத்து 30 பிரிவு கால்வாய்கள் வாயிலாக விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் களிமண் பகுதியில் கால்வாய் கரைகள் வலுவிழந்து கான்கிரீட் சிலாப்புகள் படிப்படியாக விழதொடங்கியது மழைக்காலங்களில் கனிமண்ணில் அதிக தண்ணீர் தேங்கி நிற்பதால் மண்சரிவும் ஏற்பட்டது. தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதுப்பிக்கும் பணி

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மிகவும் சேதம் அடைந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதுப்பாளையம் கிளை கால்வாயில் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு களிமண் நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் கரைகள் வலுவிழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கரைகளை புதுப்பிக்க ரூ.4 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியில் கரை சிலாப் கற்கள் முதலில் அகற்றப்படுகிறது. கரையை ஒட்டியுள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் களிமண்ணை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு அவ்விடத்தில் செம்மண் கொட்டி சீரமைக்கப்படுகிறது. பின்னர் சமன்படுத்தி அதன் மேல் கான்கிரீட் சிலாப்கள் பதிக்கப்படுகின்றன.தரைத்தளத்திலும் சிமெண்டு கரை அமைக்கப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் களிமண்ணால் கரைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். புதுப்பாளையம் கிளை கால்வாயில் தற்போது 2 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் பணிகள் நிறைவு பெறும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Related Tags :
Next Story