மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் கஞ்சா, போதை ஐஸ்
கீழக்கரை, ஏர்வாடியில் மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை ஐஸ் போன்ற போதை பொருட்கள் விற்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை,
மாணவர்களை குறி வைத்து
கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து கஞ்சா, ஐஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு போதை ஆசாமிகள் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் இளைஞர்களையே தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களை போதை பொருட்களுக்கு அடிமையாக்கி சட்ட விரோத செயலுக்கு உடந்தை ஆக்குகின்றனர். ஆசை வார்த்தைகளை கூறி சட்டவிரோதமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கஞ்சா மற்றும் ஐஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட வைக்கின்றனர்.
போதை பொருள் வியாபாரிகளிடம் வைத்துள்ள நட்பால் சில மாணவர்கள் சக மாணவர்களையும் சீரழித்து வருகின்றனர். வேகமாக பரவி வரும் போதை பொருள் கலாசாரத்தால் அப்பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சட்டவிரோத செயல்கள்
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து நடக்கும் போதை பொருள், சட்ட விரோத விற்பனையால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏர்வாடி, கீழக்கரை, சின்ன மாயாகுளம், முள்ளுவாடி, கடற்கரை பகுதி, வடக்கு தெரு, மணல்மேடு பகுதி, ரஹ்மானியா நகர், புதிய மீன் மார்க்கெட், பஸ் நிலையம், சில தெருக்களில் அமைந்துள்ள பெட்டிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் விற்பனை தலங்களாக போதை கும்பல் பயன்படுத்தி வருகிறது.
மாணவ சந்ததியினர் போதைக்கு வாழ்வை சீரழித்து வருவது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இதேநிலை தொடருமானால் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும். எனவே போதை பொருள் விற்பனை கும்பல் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் கவனம் செலுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்து கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் கஞ்சா, போதை ஐஸ் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.