கஞ்சா இல்லாத கிராம விழிப்புணர்வு
இத்தலாரில் கஞ்சா இல்லாத கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மஞ்சூர்,
தமிழகத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் போதைப்பொருட்கள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று ஊட்டி அடுத்த இத்தலார் கிராமத்தை கஞ்சா பயன்பாடு இல்லாத கிராமமாக மாற்ற நடவடிக்கையாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் கிராமங்களில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் நாங்கள் கஞ்சா பயன்படுத்த மாட்டோம் போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.