நாட்டு மாடுகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய முடியாது
நாட்டு மாடுகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய முடியாது
உடுமலை விவசாயி முருகேசன்:-
நாட்டு மாடுகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய முடியாது என்கிறார்களே! உண்மையா?
இயற்கை விவசாயிகள்
நமது முன்னோர்கள் வழிகாட்டிய பாரம்பரிய விவசாயத்தில் நாட்டு மாடுகளின் பங்கு பெருமளவு இருந்தது. நிலத்தைப் பண்படுத்துவது, நீர் இறைப்பது, விளைபொருட்களை எடுத்துச் செல்வது என அவற்றின் பங்களிப்பு பெருமளவு இருந்தது. அத்துடன் விவசாயக்கழிவுகளைத் தின்று சாணம், கோமியம், பால் உள்ளிட்ட மகத்தான பொருட்களை அவை தந்தது. ஆனால் தற்போது நாட்டுமாடுகள் வளர்ப்பு குறைவாகவே உள்ளது. இயற்கை விவசாயத்துக்குத் தேவையான பஞ்சகவ்யா உள்ளிட்ட இடுபொருட்களை தயாரிப்பதற்கு சாணம், கோமியம், பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படுகிறது. அவற்றை நாட்டு மாடு அல்லாத கலப்பின மாடுகளிடமிருந்தும் பெற முடியும். இதுதவிர ஆடுகள், கோழிகள், மீன்கள் என்ற பல உயிர்களின் பங்களிப்பு இயற்கை விவசாயத்தில் இருப்பது நல்லது.
மடத்துக்குளம் விவசாயி செல்வராஜ்:- கத்தரி சாகுபடியில் காய்ப் புழுக்களின் தாக்குதலை எப்படி கட்டுப்படுத்துவது ?
உடுமலை தோட்டக்கலைத்துறை அதிகாரி:-
கத்தரி நடவு செய்த 15 முதல் 20 நாட்களிலேயே புழுக்களின் தாக்குதல் தொடங்கி விடும். பூ மொட்டுக்கள், பூக்கள் மற்றும் பிஞ்சுக் காய்களை இவை தாக்குகிறது. தாக்குதலுக்குள்ளான காய்களின் மேல் துளைகள் காணப்படும். அந்த துளைகளின் மேல் புழுவின் கழிவுகள் தள்ளப்பட்டிருக்கும். காய்ப்புழுக்களின் தாக்குதல் தவிர்க்க தொடர்ந்து கத்தரி சாகுபடி செய்வதைத் தவிர்த்து தானியங்கள், பயறு வகைகளை சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம். தாக்குதல் அதிகமாக இருந்தால் வேப்பங்கொட்டை சாறு 5சதவீதம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி ப்ரோபனோபாஸ் அல்லது கார்பரில் நனையும் தூள் ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். பூக்கும் சமயத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி மாலத்தியான் 50 இசி மருந்தை 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.கண்டிப்பாக மருந்து தெளிக்கும் முன், அறுவடைப் பருவத்தில் காய்கள் இருந்தால் அறுவடை செய்து விட வேண்டும்.
----