அரசு பஸ்சை சிறைபிடித்துகிராமமக்கள் மறியல் போராட்டம்
கழுகுமலை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே ஆதிதிராவிடர் சமுதாய கூடத்தை, சி.ஆர்.காலனியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதை கரடிகுளம் சின்னகாலனி பகுதியில் அமைக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் நேற்று அரசு பஸ்சை சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதிதிராவிடர் சமுதாய கூடம்
கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சி.ஆர்.காலனி பகுதியில் தாட்கோ மூலம் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான ஆதிதிராவிடர் சமுதாய கூடம் கட்டுவதற்காக பஞ்சாயத்து மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதையறிந்த அக்கிராம மக்கள் கடந்த வாரம் தூத்துக்குடி கலெக்டரிடம், தங்கள் பகுதியான சின்னகாலனியில் தான் ஆதி திராவிடர் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.
இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சாலைமறியல் போராட்டம்
இந்நிலையில் நேற்று கரடிகுளம் சி.ஆர். காலனியில் ஆதிதிராவிடர் சமுதாய கூடம் அமைப்பதற்கான பணிகள் மீண்டும் நடைபெற்று வருவதை அறிந்த கரடிகுளம் மற்றும் சின்ன காலனி பொதுமக்கள் நாட்டாமை கடற்கரை மற்றும் பழனிச்சாமி தலைமையில் கரடிகுளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வெள்ளப்பனேரியில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டு இருந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், மாரியப்பன், ராஜ்மோகன், கிராம நிர்வாக அதிகாரி ரீனா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
அப்போது, கரடிகுளம் சின்ன காலனியில் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் 95 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால் சி.ஆர் காலனி பகுதியில் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் 10 சதவீதம் பேர்தான் உள்ளனர். எனவே ஆதிதிராவிடர் அதிகம் வசிக்கும் பகுதியில் தான் சமுதாயகூடத்தை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் குடிநீர் பிரச்சினை குறித்தும் அதிகாரிகளிடம் கூறினர்.
தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.