பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி


பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி
x

சேத்துப்பட்டு அருகே பஸ் மீது கார்மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே பஸ் மீது கார்மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பட்டாசு வாங்க சென்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வடிவேல் (வயது 32). அதேப் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் சங்கர் (35). மாணிக்கம் மகன் ஆனந்தன் (45), சின்ன தம்பி மகன் சிவராமன் (32), சேட்டு மகன் பிரகாஷ் (37).

இவர்கள் 5 பேரும் ஊர் திருவிழாவை முன்னிட்டு இன்று சேத்துப்பட்டுக்கு காரில் வந்து பட்டாசுகள் வாங்கிக் கொண்டு ஊருக்கு திரும்பினர். சேத்துப்பட்டு- தேவிகாபுரம் இடையே கிழக்குமேடு பகுதியில் மாலை 6.30 மணியளவில் சென்று கொண்டிருந்தனர்.

பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி

அப்போது போளூரில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பஸ் மீது திடீரென கார் மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் இறங்கி நின்றது. பஸ் மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் வந்த வடிவேல், சங்கர், ஆனந்தன், சிவராமன் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பிரகாஷ் படுகாயம் அடைந்தார். அவரை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மொபட் சிக்கியது

விபத்து நடந்த நேரத்தில் பஸ்சுக்கு எதிரே இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவர் மொபட்டில் வந்தார். அவர் விபத்து நடக்கபோவதை அறிந்ததும் மொபட்டை விட்டு விட்டு இறங்கி ஓடிவிட்டார். இதனால் மொபட் பஸ் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story