மொபட் மீது கார் மோதி காவலாளி பலி
நெல்லை அருகே மொபட் மீது கார் மோதி காவலாளி பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம்புதூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). இவர் நெல்லை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை கனகராஜ் மொபட்டில் ரெட்டியார்பட்டி - இட்டேரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள் கனகராஜ் மொபட், மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் கனகராஜ் தூக்கி வீசப்பட்டு, மற்றொரு காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதவிர மோட்டார் சைக்கிளில் வந்த கயத்தாறை சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் காயம் அடைந்தார்.
தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துரைப்பாண்டியும் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், மோதிய ஒரு கார் அந்த பகுதியை சேர்ந்த மதபோதகருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் 2 கார்களையும் ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.