கார் மோதி மின்கம்பங்கள் சேதம்
இடையிருப்பு அருகே கார் மோதி மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
மெலட்டூர்:
பாபநாசத்தை அடுத்த இடையிருப்பு அருகே உள்ள மணப்படுகை கிராமத்தை சேர்ந்தவர் முல்லைவனம். இவர் தனது காரில் சாலியமங்களத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இடையிருப்பு அருகே கார் வந்த போது ரோட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி முல்லைவனம் ஓட்டிவந்த காரில் விழுந்ததாக கூறப்படுகிறது அப்போது கார் பேனட்டில் சிக்கி அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பதற்றமடைந்த முல்லைவனம் காரை வேகமாக மணப்படுகை நோக்கி ஓட்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 மின்கம்பங்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன. உடனடியாக மின்சாரத்தை துண்டித்ததால் அதிஷ்டவசமாக முல்லைவனம் மற்றும் காரில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் மின்வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.