மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பெண் பலி
மானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பெண் பலியானார்.
மானூர்:
மானூர் அருகே ரஸ்தா பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மனைவி ஆறுமுகம் (வயது 45). இவர் நேற்று காலையில் தன்னுடைய மகன் கணேசுடன் (23) மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள தங்களது விவசாய தோட்டத்துக்கு புறப்பட்டு சென்றார். நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் ரஸ்தா பகுதியில் சென்றபோது, அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். இதுகுறித்து மானூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த கணேஷை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இறந்த ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த நெல்லை சி.என். கிராமத்தைச் சேர்ந்த கணேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.