மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி
x

பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியானார். படுகாயம் அடைந்த அவருடைய மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒலுகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (40). இவர்கள் 2 பேரும் பொன்னமராவதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

பொன்னமராவதி அருகே பரியாமருதுபட்டி சாலையில் சென்றபோது சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தம்பதியினர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பின்னர் அந்த கார் அருகே உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முற்றிலுமாக முறிந்து கீழே விழுந்தது. பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.

தொழிலாளி பலி

இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். பின்னர் மணிமேகலை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story