மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்:கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம்
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள மந்தித் தோப்பு, மேட்டு தெருவை சேர்ந்த ஞானசேகர் மகன் மணிகண்டன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவருடைய மோட்டார் சைக்கிளில் சக தொழிலாளிகளான மந்தித் தோப்பு கணேஷ் நகர் செல்வம் மகன் அய்யனார் (20), எட்டயபுரம் காலனி தெரு முத்துராஜ் மகன் தங்க மாரியப்பன் (43) ஆகியோர் கட்டிடப் பணிக்காக கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சாலைப்புதூர் நாற்கரச்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது எதிரே காஞ்சிபுரத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் 3 பேரும் மோட்டார் ைசக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த 3 பேரையும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அய்யனார் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் காஞ்சிபுரம் அப்துல் ரஹீம் மகன் முகமது காசிம் கான் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.