சேலம் மேம்பாலத்தில் விபத்து: கார் மோதி பார்மசி கல்லூரி மாணவர் பலி உறவினர்கள் தர்ணா போராட்டம்
சேலம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பார்மசி கல்லூரி மாணவர் பலியானார். கொலை வழக்காக மாற்றக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
மோட்டார் சைக்கிள் மீது மோதியது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எலுமிச்சை காலனியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மகன் குணாளன் (வயது 20). இவர் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் பி.பார்ம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு குணாளன் கல்லூரி நண்பரான தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முகமது அலி (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் அங்கு சென்னைக்கு பஸ்சில் மற்றொரு நண்பரை ஏற்றிவிட்டு மீண்டும் கல்லூரி விடுதிக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை முகமது அலி ஓட்டினார். 5 ரோட்டில் இருந்து அஸ்தம்பட்டி செல்லும் மேம்பாலத்தில் சென்றனர். அப்போது ஒருவழி பாதையான அந்த சாலையில் எதிரே வந்த கார் கண் இமைக்கும் நேரத்திற்குள் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
மாணவர் பலி
இதில் முகமது அலி, குணாளன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணாளன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முகமது அலி மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அஸ்தம்பட்டி பகுதியில் இருந்து பாலத்தின் மீது ஏறி செல்ல தடை இருந்தும் ஒரு வழிப்பாதையில், போக்குவரத்து விதியை மீறி காரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்ணா போராட்டம்
இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூட அறையில் வைக்கப்பட்டிருந்த குணாளனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் இந்த விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி குணாளனின் உறவினர்கள் மற்றும் அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் திடீரென அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.