பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கார் டிரைவர் கைது
பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கார் டிரைவர் கைது
திருவிடைமருதூர்
ஆடுதுைற அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கார் டிரைவர்
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை நடராஜபுரம் அக்ரகாரம் தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு. கார் டிரைவர். இவரது மனைவி இந்துமதி(வயது24). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதன் காரணமாக மனமுடைந்த இந்துமதி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த இரண்டு தினங்கள் முன்பு ராஜகுரு தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
சந்தேக மரணம்
இந்நிலையில் வீட்டில் தனி அறையில் இந்துமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் கும்பகோணம் ஆர்.டி.ஓ. லதா மேல் விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்துமதியின் உறவினர்கள், ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றி வேந்தனிடம் புகார் மனு அளித்தனர். மேலும் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டிரைவர் கைது
இதையடுத்து திருவிடைமருதூர் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக இந்துமதியின் கணவர் ராஜகுருவை கைது செய்தனர். அதன் பின்னர் திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இந்துமதியின் உடலை அவரது பெற்றோர் வாங்கி கொண்டு அவர்களது சொந்த ஊரான மரத்துறைக்கு கொண்டு சென்றனர்.