கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
களியக்காவிளை:
களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குழித்துறை அருகே உள்ள வண்ணந்துவிளையை சேர்ந்தவர் எட்வின் ஜார்ஜ் (வயது 60). கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு அதற்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும், அவருக்கு பல்வேறு நோய்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக எட்வின் ஜார்ஜ் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும், மருத்துவ செலவிற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார்.
இந்தநிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு டிரைவர் வேலைக்கு சென்றார். ஆனால், அங்கும் கண் பார்வை குறைபாடு காரணமாக அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து ஊருக்கு வந்த அவர், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். மேலும், கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று எட்வின் ஜார்ஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று எட்வின் ஜார்ஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி டைசிபாய் (59) கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.