அந்தியூரில் கருமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம்
அந்தியூரில் கருமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம் நடந்தது.
அந்தியூர்
அந்தியூரில் கருமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம் நடந்தது.
பொங்கல் வைத்து வழிபாடு
அந்தியூரில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான கருமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கருமலை ஆண்டவர், பெருமாள் மற்றும் காமாட்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன.
நேற்று பொங்கல் விழா மற்றும் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கருமலை ஆண்டவருக்கு கிடாவை பலிகொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர்.
தேரோட்டம்
அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக 50 அடி உயரம் கொண்ட மகமேரு தேரில் கருமலை ஆண்டவரும், சிறிய தேரில் பெருமாளும், பல்லக்கில் காமாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள்.
பின்னர் கருமலை ஆண்டவர் தேரை மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தோள் மீது சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். அதேபோல் பெருமாள் தேரையும், காமாட்சி அம்மன் பல்லக்கையும் தோள் மீது சுமந்து கொண்டு பக்தர்கள் வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் ரோட்டின் ஓரத்தில் தேங்காய், பழங்கள் படைத்து வழிபட்டனர். திருவிழாவில் அந்தியூர் மற்றும் அந்தியூரை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.