புதுக்கோட்டை: கார்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல் - டிரைவர் பலி...!
அன்னவாசல் அருகே கார்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே திருச்சியிலிருந்து காய்கறி ஏற்றி சென்ற மினி சரக்கு வேனும், ராமநாதபுரத்திலிருந்து திருச்சி விமான நிலையம் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மினி சரக்கு வேனின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மலேசியாவுக்கு செல்ல இருந்த நபர் உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
அன்னவாசல் அருகே நடந்த விபத்தில் மினி சரக்கு வேனை ஓட்டி சென்ற வடவாளம் பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரில் பயணம் மேற்கொண்ட மலேசியாவுக்கு செல்ல இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த காஜா உசேன், சையது இப்ரஹிம், சையது அபுதாஹிர், ஷிகானி உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசியாவுக்கு செல்ல இருந்த காஜா உசேன் என்பவர் காதில் ரத்தம் வந்த நிலையில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.