கார்- லாரி நேருக்கு நேர் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். கணவர் மற்றொரு மகன் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார்- லாரி மோதல்
தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது மனைவி காமாட்சி (40). இவர்களுக்கு சக்திவேல் (15), சஞ்சய் (13) என 2 மகன்கள்.
நேற்று முன்தினம் இரவு செல்வம் அவரது மகன் சக்திவேலுவிற்கு உடல்நிலை சரியில்லாததால் காரில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். காரை அதேபகுதியை சேர்ந்த இளையராஜா (28) என்பவர் ஓட்டினார். செல்வத்துடன் அவரது மனைவி மற்றும் மற்றொரு மகனும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
அங்கு சக்திவேலுவிற்கு சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டுக்கு புறப்பட்டனர். இரவு சுமார் 11.50 மணியளவில் செங்கம் செல்லும் சாலையில் கோளாப்பாடி இந்திரா நகர் பகுதியில் சென்றபோது எதிரே கோவையில் இருந்து காலி பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரி திடீரென இவர்கள் சென்ற காரின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
தாய், மகன் உள்பட 3 பேர் பலி
இந்த விபத்தில் செல்வத்தின் மனைவி காமாட்சி, மகன் சக்திவேல், கார் டிரைவா் இளையராஜா ஆகிய 3 பேரும் உடல் நசுங்கிய சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் செல்வம் மற்றும் சஞ்சய் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயத்துடன் இருந்த செல்வம், சஞ்சய் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உடல் நசுங்கி இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அய்யப்பன் (42) என்பவரை கைது செய்தனர்.
துக்கம் விசாரிக்க...
நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அருகே வெறையூரில் மோட்டார்சைக்கிளில் துக்கம் விசாரிக்க சென்ற 3 பேர் அரசு விரைவு பஸ் மோதி இறந்தனர். அந்த விபத்து நடந்த சில மணி நேரத்திலேயே கார் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.