பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி
வேப்பூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்
ராமநத்தம்
முந்திச்செல்ல முயன்ற மற்றொரு கார் மோதியதால் நடந்த இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
முந்திச்செல்ல முயன்ற கார் மோதியது
புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாத கல்லூரை சேர்ந்தவர் கமாலுதீன்(வயது 72). இவரது மகன் சதாம் உசேன்(33). இவர்கள் தங்களது உறவினர்களான மஜீத் மகன் முகமது இஸ்ரத்(15), ஜாகிர் உசேன் மனைவி ஷர்மிளா பானு, மகள் பிஸ்மி மிகரா(15), கோவில்பட்டினத்தைசேர்ந்த ஹனிபா மகன் புகாரி(25) ஆகியோருடன் காரில் புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஏ.கொளப்பாக்கம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு கார் கமாலுதீன் உள்ளிட்டோர் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றது. அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக கமாலுதீன் சென்ற கார் மீது மோதியது.
பள்ளத்தில் கவிழ்ந்தது
இதில் தறிகெட்டு ஓடிய கமாலுதீனின் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கமாலுதீன் உள்பட 6 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்தபோது கமாலுதீன், முகமது இஸ்ரத் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து புகாரி உள்ளிட்ட 4 பேருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.