ஊட்டி -மஞ்சூர் சாலையில் கார் கவிழ்ந்தது-போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி -மஞ்சூர் சாலையில் கார் கவிழ்ந்தது-போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி
கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் அஜ்மல். இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் காரில் நேற்று ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். இதைத் தொடர்ந்து ஊட்டியில் கார் வேல் பூங்கா படகு இல்லம் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், கைகாட்டி வழியாக மஞ்சூர் சென்று அங்கிருந்து கெத்தை வழியாக சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து காரில் சென்று கொண்டிருந்தனர். காரை அஜ்மல் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் குந்தா அடுத்த சாம்ராஜ் எஸ்டேட் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
இதன் பின்னர் சாலையோர தடுப்பில் மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய அவர்கள் செய்வதறியாமல் காருக்குள் இருந்தவாறு சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அருகில் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள் மற்றும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டனர். அவர்களுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படாததால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். முன்னதாக நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதால் மஞ்சூர்- ஊட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.