சேலம் சீலநாயக்கன்பட்டியில் கார் கவிழ்ந்து விபத்து; 2 பேர் படுகாயம்
சேலம் சீலநாயக்கன்பட்டியில் கார் கவிழ்ந்து விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அன்னதானப்பட்டி,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவருடைய மனைவி பரிமளா (65). இவர்களது மருமகன் பாலு (45). இவர் ஊரில் வீடு கட்டி வருகிறார். இது சம்பந்தமாக வீட்டிற்கு தேவையான கிரானைட் கற்களை கிருஷ்ணகிரியில் சென்று வாங்க முடிவு செய்திருந்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை விராலிமலையில் இருந்து மாமனார், மாமியார், மருமகன் மூவரும் தங்களது காரில் திருச்சி, நாமக்கல், சேலம் வழியாக கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டு வந்தனர். இவர்களுடன் பில்டிங் காண்ட்ராக்டர் தங்கவேலு (59) என்பவரும் வந்துள்ளார். காரை பாலு ஓட்டி வந்துள்ளார்.
காலை 6.50 மணி அளவில் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி அழகு நகர், தட்சிணாமூர்த்தி கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. அந்த சமயம் கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் முருகன், தங்கவேலு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பரிமளா, பாலு இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.