பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்து; சுற்றுலா பயணிகள் 6 பேர் படுகாயம்
கொடைக்கானல் அருகே பள்ளத்தில் கார் பாய்ந்து சுற்றுலா பயணிகள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வார விடுமுறைையயொட்டி நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அதன்படி, கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் திருச்சூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் காரில் நேற்று கொடைக்கானலுக்கு வந்தனர். அப்போது சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, மாலையில் கேரளாவுக்கு அதே காரில் திரும்பினர். அவர்களது கார் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் பெருமாள்மலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் கார் தாறுமாறாக ஓடிய கார், ஒருகட்டத்தில் மலைப்பாதையில் இருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.