மடிப்பாக்கத்தில் கார் ஷோரூம் மேலாளர் வீட்டில் புகுந்து 60 பவுன் நகை திருட்டு
மடிப்பாக்கத்தில் கார் ஷோரூம் மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகளை திருடிச் சென்ற கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.
மடிப்பாக்கம்,
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் குபேர நகர் 4-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பன்னீர்செல்வம் (வயது 28). இவர் கார் விற்பனை ஷோரூமில் மேலாளராக பணியற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் விழுப்புரம் திருவெண்ணெய் நல்லூர் கிராமத்திற்கு சென்றார். இந்த நிலையில் இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பன்னீர்செல்வத்திற்கு உடனடியாக தகவல் தந்தனர்.
இதையடுத்து உடனடியாக சென்னை திரும்பிய அவர், வந்து பார்த்த போது முன்பக்க இரும்பு கதவு மற்றும் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
கொள்ளையனுக்கு வலைவீச்சு
இதுபற்றி அறிந்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. மேலும் மோப்பநாய் வரவைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் வந்து கதவை உடைத்து வீட்டில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கொடுங்கையூர் சின்னாண்டிமடம் திருவள்ளூவர் சாலையைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (80). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மாரியம்மாள் கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்கி உள்ளார். இந்த சமயத்தை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் யாரோ உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த ரூ.3 லட்சம், 5 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாரிகளை தேடி வருகின்றனர்.