திண்டிவனத்தில் கார் வாங்குவது போன்று நடித்து திருடி சென்றவர் கைது
திண்டிவனத்தில் கார் வாங்குவது போன்று நடித்து திருடி சென்றவர் கைது செய்யப்பட்டனா்.
திண்டிவனம்,
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் காசி லிங்கம் மகன் அமிர்தலிங்கம்(வயது 23). இவர் தனது காரை விற்பனை செய்யப்போவதாக முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த சென்னையை சேர்ந்த ராஜா என்பவர் நான் வாங்கிக் கொள்கிறேன் என்று போன் மூலம் அமிர்தலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காரை திண்டிவனத்துக்கு கொண்டு வந்து ராஜாவிடம் அமிர்தலிங்கம் காண்பித்தார். அப்போது, காரை ஓட்டி பார்த்து வாங்கிக்கொள்வதாக, அவரிடம் கூறியுள்ளார்.
அதன்பேரில், காரை அவரிடம் அமிர்தலிங்கம் கொடுத்தார். ஆனால் காரை ஓட்டி சென்ற ராஜா திரும்பி வரவில்லை. இதன் பின்னர் தான், கார் வாங்குவது போன்று நடித்து, தன்னை ஏமாற்றி அவர் காரை திருடி சென்று இருப்பது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து, அமிர்த லிங்கம் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திண்டிவனம் மேம்பாலம் அருகில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, அதில் வந்தவரிடம் விசாரித்தனர். அதில், அமிர்தலிங்கத்திடம் தனது பெயர் ராஜா, சென்னையை சேர்ந்தவர் என்று பொய்யான தகவலை கூறி காரை திருடி சென்றவர் என்பது தெரிவியந்தது.
மேலும் அவரது உண்மையான பெயர், சுலைமான் (39) என்பதும், அவர் திருப்பத்தூர் புதுத்தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையுத்து சுலைமானை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.