கார் கண்ணாடியை உடைத்து செல்போன், பணம் திருட்டு
மயிலம் அருகே கார் கண்ணாடியை உடைத்து செல்போன் மற்றும் பணத்தை திருடிசென்ற திருச்சி வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்
மயிலம்
கார் கண்ணாடியை உடைத்து
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர் சம்பவத்தன்று காரில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்தார்.
அப்போது மர்ம நபர்கள் அவரது காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ஆப்பிள் செல்போன் மற்றும் ரூ.7 ஆயிரத்தை திருடிசென்றுவிட்டனர். இது குறித்து ஹேமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்போன், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
வாகன சோதனை
இந்த நிலையில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மேற்பார்வையில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் புதுச்சேரி-மயிலம் சாலை ஆவின் பாலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணைியல் அவர்கள் திருச்சி மாவட்டம் கோனார் குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் குணசேகரன்(25), கோட்டூர் கிராமம் மோகன் மகன் கோவர்தன்(19) என்பதும், கூட்டேரிப்பட்டில் ஹேமச்சந்திரனின் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.