கவனக்குறைவால் எழுத்துப்பிழை
நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையில் கவனக்குறைவால் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு-மதுரை சாலையில், மல்லனம்பட்டி அருகே உள்ள வளைவான பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அறிவிப்பு பலகையையும் நெடுஞ்சாலைத்துறையினர் வைத்துள்ளனர்.
அந்த அறிவிப்பு பலகையில், 'மைய தடுப்பான் உள்ளது கவனமாக செல்லவும்' என்பதற்கு பதிலாக 'மையத் தடுப்பான் உள்ளது கவணமாக செல்வும்' என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது கவனம் என்பதற்கு பதில் கவணம் என்றும், செல்லவும் என்பதற்கு பதிலாக செல்வும் என்றும் உள்ளது. கவனமாக செல்லவும் என்பதில் கூட, கவனம் இல்லாமல் எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் சிரித்தப்படி கடந்து செல்கின்றனர். எனவே அறிவிப்பு பலகையில் உள்ள பிழையை திருத்த நெடுஞ்சாலைத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.