ஆற்றில் சரக்கு ஆட்டோ பாய்ந்து டிரைவர் பலி


வாய்மேடு அருகே ஆற்றில் சரக்கு ஆட்டோ பாய்ந்து டிரைவர் பலியானார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு அருகே ஆற்றில் சரக்கு ஆட்டோ பாய்ந்து டிரைவர் பலியானார்.

ஆற்றில் பாய்ந்த சரக்கு ஆட்டோ

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூர் ஆண்டியப்பன் காடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது40).இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவர் நேற்று காலை தனது சரக்கு ஆட்டோவில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தகட்டூர் கடைத்தெருவில் இருந்து தென்னடாருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பஞ்சநதிக்குளம் மேற்கில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சரக்கு ஆட்டோ, அந்த பகுதியில் உள்ள முள்ளியாற்றில் பாய்ந்தது. இதில் டிரைவர் செந்தில்குமார் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கினார்.

டிரைவர் சாவு

இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இருந்து செந்தில்குமாரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர், செந்தில்குமாரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாய்மேடு போலீசார், செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செந்தில்குமாருக்கு விசித்ரா (36) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.


Next Story