அன்னவாசல் அருகே கார் மீது சரக்கு வேன் மோதல்; 4 பேர் படுகாயம்


அன்னவாசல் அருகே கார் மீது சரக்கு வேன் மோதல்; 4 பேர் படுகாயம்
x

அன்னவாசல் அருகே பாம்பு மீது ஏறாமல் இருக்க சரக்கு வேனை திருப்பியபோது கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

கார் மீது சரக்கு வேன் மோதல்

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி கிருத்திகா (வயது 37). இவர்களுக்கு யோகபிரமிளின் (12), லேகாஸ்ரீ (8) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கிருத்திகா தனது மகள்களுடன் ஒரு காரில் வெளியூர் சென்றுவிட்டு செம்பாட்டூர் சென்று கொண்டிருந்தார். காரை அவரது சகோதரர் கார்த்திக்கேயன் ஓட்டியுள்ளார்.

அன்னவாசல் இடையர்தெருவை சேர்ந்த பழனி (43) என்பவர் அன்னவாசலில் இருந்து இலுப்பூர் நோக்கி சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே செங்கப்பட்டி கோவில் அருகே சென்றபோது சாலையில் சென்ற பாம்பு மீது ஏறாமல் இருக்க பழனி தனது சரக்கு வேனை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது.

4 பேர் படுகாயம்

இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த கிருத்திகா, யோகபிரமிளின், லேகாஸ்ரீ, சரக்கு வேன் டிரைவர் பழனி (43) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்தவழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் சரக்கு வேன் டிரைவர் பழனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story