சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவன் உள்பட 2 பேர் பலி
ம்மாப்பேட்டை அருகே சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள்
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை அருகே சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
மோட்டார் சைக்கிளில்...
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே சோழவன்னியன் குடிகாடு கிராமம் மூங்கில் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் அருண்குமார்(வயது 21) டிரைவர்.
இவரது வீட்டில் உறவினரான ராராமுத்திரக்கோட்டை அருகே கள்ளிமேடு கிராமம் ெரயிலடி தெருவை சேர்ந்த மோகன் மகன் யோகேஸ்வரன்(14) தங்கியிருந்து பூண்டியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று இரவு 8.30 மணி அளவில் அருண்குமாரும், யோகேஸ்வரனும் கோவிலூர் கடைவீதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டி வந்தார்.
மாணவன் உள்பட 2 பேர் பலி
பூண்டி கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமாரும், யோகேஸ்வரனும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்துகுறித்து தகவல் அறிந்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஐஸ்வர்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான அருண்குமார், யோகேஸ்வரன் ஆகியோரின் உடல்களை மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.