தச்சு தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை


தச்சு தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே தச்சு தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

துடியலூர், பிப்.28-

கோவை அருகே தச்சு தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தச்சு தொழிலாளி

கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் கோவில்மேட்டை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மனைவி வேலம்மாள் (வயது 60). இவர்களுக்கு தங்கமாரி, செல்வி என்ற மகள்களும், மணிகண்டன் (23) என்ற மகனும் இருந்தனர். மணிகண்டன் தச்சுத்தொழில் செய்து வந்தார்.

தங்கமாரி, செல்வி ஆகிய 2 பேரும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா இறந்துவிட்டதால், வேலம்மாள் தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார்.

குடிபோதையில் தகராறு

மணிகண்டனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தங்கமாரியை அவருடைய கணவர் அய்யப்பன் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் குடிபோதையில், அய்யப்பனிடம் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மணிகண்டனை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தங்கமாரி தனது சகோதரி செல்வியிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். அப்போது செல்வியின் கணவர் பாலசுப்பிரமணியம் உங்கள் தம்பிக்கு வேறு வேலை கிடையாதா? எப்போது பார்த்தாலும் மதுகுடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறான் என்று கேட்டுள்ளார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த தங்கமாரி, செல்வி ஆகியோர் பாலசுப்பிரமணியத்தை கண்டித்துள்ளனர்.

அடித்து கொலை

இதனால் பாலசுப்பிரமணியத்துக்கு, மணிகண்டன் மீது கோபம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியம் குடிபோதையில் மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். இதில் தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து பாலசுப்பிரமணியம் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.மேலும் தனது மனைவி செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டு, உன் தம்பி உயிருடன் இருக்கிறானா? என்று போய் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்துவிட்டார். இதனால் பதறிபோன செல்வி, தனது தாய் வேலம்மாளுடன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனைக்கண்டு 2 பேரும் கதறி அழுதனர்.

மைத்துனர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தச்சு தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.


Next Story