மோட்டார் சைக்கிள் விபத்தில் தச்சு தொழிலாளி சாவு
காரிமங்கலம்:-
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தச்சு தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியமுரசுபட்டி பூதாள்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 25). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
நவீன்குமார் வேலையை முடித்து விட்டு அனுமந்தபுரத்தில் இருந்து காரிமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் இறக்க முயன்றார்.
ஆஸ்பத்திரியில் சாவு
அப்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் நந்தகுமாருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் நவீன்குமாரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களூரூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நவீன்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.