கடலூர் அருகேகார்கள்- மோட்டார் சைக்கிள் மோதல்; தம்பதி உள்பட 3 பேர் காயம்
கடலூர் அருகே கார்கள், மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த தோட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 50). கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை காரில் கல்லூரிக்கு புறப்பட்டார். கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சென்றபோது, திருக்கோவிலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த மற்றொரு காரும், செந்தில்நாதன் காரும் மோதிக் கொண்டன. மேலும் அந்த சமயத்தில் கடலூர் கோண்டூரில் இருந்து குணமங்கலம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆறுமுகம், அவரது மனைவி ஞானசவுந்தரி மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் காயமடைந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து விபத்தில் சிக்கிய தம்பதி உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.