கோவில் விழாவில் தகராறு; 12 பேர் படுகாயம்
கோவில் விழாவில் நடந்த தகராறில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூரில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்து, மண்டல பூஜை விழா நடைபெற்று வந்தது. 48-ம் நாளான நேற்று முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தது தொடர்பாக இருதரப்பினர் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு, செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த வாலாந்தூரை சேர்ந்த மலர்விழி (வயது45), பாண்டி (65), சங்கிலி (55), பாண்டி (50), ஜெயபாண்டி (40), ஆரியபட்டியை சேர்ந்த கல்யாணி (19), வீரராகவன் (35), கீர்த்தி ராஜா (26), தமிழரசு (29), கல்யாணி (27), வயக்காட்டுசாமி (48), ராஜா (56) ஆகிய 12 பேரையும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோதல் சம்பவம் தொடர்பாக வாலாந்தூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.