பெண்ணின் சாவில் மர்மம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை


பெண்ணின் சாவில் மர்மம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை
x

திருவாடானை அருகே சாவில் மர்மம் இருப்பதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அருகே சாவில் மர்மம் இருப்பதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

உடல்நலக்குறைவு

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் அதே கிராமத்தை சேர்ந்த பூபாலன். இவரது மகன் செங்கதிர் செல்வனுக்கும் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா பகவதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் மகள் உமா மகேசுவரி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் குடும்பத்துடன் காரைக்குடியில் வசித்து வந்தனர். இந்தநிலையில் உமா மகேசுவரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி உமாமகேசுவரி இறந்துவிட்டார்.

புகார்

இறந்த உமா மகேசுவரியின் உடலை அவரது தாயாரின் சொந்த ஊரான திருவாடானை அருகே உள்ள கற்காத்தக்குடி கிராமத்தில் அவரின் பெற்றோர்கள் அடக்கம் செய்துள்ளனர்.

இந்தநிலையில் தங்களது மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக அவரின் பெற்றோர்கள் காரைக்குடி அழகப்பாபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உமா மகேசுவரியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட கற்காத்தக்குடியில் நேற்று திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

பரிசோதனை

பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவரால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், திருவாடானை வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர் சேக்ரட்நாத் மற்றும் இறந்த உமா மகேசுவரியின் பெற்றோர், சகோதரர்கள் உடன் இருந்தனர்.


Next Story