போலீஸ் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு


போலீஸ் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
x

போலீஸ் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கு முடித்துவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்காக சாத்தான்குளத்தில் அவரை தங்கியிருக்கும்படியும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தச்சென்றபோது, பணியில் உள்ள போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை, மரியாதை குறைவாக நடக்கின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின்பேரில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணைசூப்பிரண்டு பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் மீதான விசாரணையின்போது 3 பேரும் நேரில் ஆஜராகி, தங்களின் நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கோரி, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். இதற்கிடையே போலீஸ்காரர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மற்ற 2 அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த 3 பேர் மீதான அவமதிப்பு வழக்கு நேற்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர் உள்பட 3 பேரும் தனித்தனியாக மன்னிப்பு கோரி ஏற்கனவே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதனை பதிவு செய்துகொள்கிறோம். ஏனென்றால் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கோர்ட்டில் நடக்கிறது. இதில் 37 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது. பிரதான வழக்கின் விசாரணைக்கு இந்த அவமதிப்பு வழக்கு இடையூறாக இருந்து விடக்கூடாது. எனவே அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story