சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒப்பிலான் கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகம்மது மீராசா என்பவரின் மகன் நிஜாமைதீன் (வயது51). இவரின் தாய் சபுராபீவி வழி பூர்வீக சொத்து டி.மாரியூர் பெரியகுளம் குரூப் பகுதியில் உள்ளது. நிஜாமைதீனின் தாய் சபுராபீவியின் தாத்தா அரக்காசு செம்மாட்டி என்பவரின் பெயரில் பட்டா உள்ளது. இந்நிலையில் அரக்காசு 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாரியூரைச் சேர்ந்த அரக்காசு சம்மாட்டி என்ற செய்யது அரக்காசு என்பவர் மோசடியாக பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து கடந்த 2013-ம் ஆண்டு ஒப்பிலானை சேர்ந்த பக்கீர் முகம்மது மகன் சீனிபக்கீர் என்பவருக்கு அந்த நிலத்தை கிரையம் செய்துகொடுத்துவிட்டாராம். கடலாடி பத்திர எழுத்தர் மற்றும் கடலாடி சார்பதிவாளர் ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த நிஜாமைதீன் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து மேற்கண்டவர்களை தேடிவருகின்றனர்.