25 கிராமங்களை மானாமதுரை தாலுகா அலுவலகத்துடன் இணைக்க கோரிய வழக்கு
25 கிராமங்களை மானாமதுரை தாலுகா அலுவலகத்துடன் இணைக்க கோரிய வழக்கில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
25 கிராமங்களை மானாமதுரை தாலுகா அலுவலகத்துடன் இணைக்க கோரிய வழக்கில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
25 கிராமங்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பில்பத்தி முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்களுடைய பகுதியான புளியங்குளம் குரூப், பெருங்கரை குரூப், கீழப்பிடாவூர் குரூப் ஆகிய 3 வருவாய் கிராமங்கள் காளையார் கோவில் தாலுகாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த 3 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 25 கிராமங்களும் சிவகங்கை, மானாமதுரை தொகுதிகளுக்கு உட்பட்டவை. இந்த 25 கிராமங்களுக்கும் மானாமதுரைக்கும் சில கிலோமீட்டர் தூரம்தான் உள்ளது. ஆனால் இந்த 25 கிராமத்தை சேர்ந்தவர்களும் தாலுகா அலுவலகம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளையார்கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளது.
எங்கள் கிராமங்களில் இருந்து காளையார்கோவில் சென்று வர 3 பஸ்கள் மாறி செல்ல வேண்டும். இதனால் அதிக செலவு ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு எங்கள் கிராமங்களை மானாமதுரை தாலுகா அலுவலகத்துடன் இணைக்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தோம். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எங்களது புகார் மனுவின் அடிப்படையில் மேற்கண்ட 25 கிராமங்களையும் மானாமதுரை தாசில்தார் அலுவலகத்துடன் இணைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நிலை அறிக்கை
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கோரிக்கை குறித்து வருவாய்த்துறை முதன்மை செயலாளருக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை அனுப்பி உள்ளார். அந்த பரிந்துரை நிலுவையில் உள்ளது, என்று தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரர் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கு 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.