கட்டிட வேலைக்கு சென்றபோது பலாத்காரம்; பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய மேஸ்திரிகள் உள்பட 4 பேர் மீது வழக்கு-போலீசார் விசாரணை
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே கட்டிட வேலைக்கு சென்ற பெண்ணை 150 முறை பாலியல் பலாத்காரம் செய்த மேஸ்திரிகள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கணவரை பிரிந்த பெண்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயது பெண். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக அந்த பெண், கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு, உத்தரவிட்டார். அதன்பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் புகார் அளித்த அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
150 முறை பலாத்காரம்
அப்போது அந்த பெண், கட்டிட வேலைக்கு சென்றபோது மேஸ்திரி ஒருவர் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் பல்வேறு இடங்களுக்கு கூட்டி சென்று அடித்து, உதைத்து 150 முறைக்கு மேல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறினார். வீடியோவை வெளியிடாமல் இருக்க என்னிடம் ரூ.3 லட்சத்தை மிரட்டி பறித்தார்.
தற்போது அந்த பணத்தை நான் கேட்கும் போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதேபோல் மற்றொரு மேஸ்திரி மற்றும் 2 பேர் என்னை பலாத்காரம் செய்தனர் என்று கூறினார்.
4 பேர் மீது வழக்கு
இதையடுத்து போலீசார் பெண்ணை பலாத்காரம் செய்ததாக பென்னாகரம் அருகே உள்ள காட்டுக்கொள்ளை பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரிகள் முருகன் (வயது 32), காளியப்பன் (30) மற்றும் கணேசன் (40), மாதேஷ் (36) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.