எருதுவிடும் விழாவில் தகராறு:வாலிபர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்4 பேர் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரி தாலுகா செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மது பிரவீன் (வயது 30). தனியார் விடுதி மேலாளர். இவர் சூளகிரி அருகே போகிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த எருது விடும் விழாவிற்கு சென்றார். அங்கு அவருக்கும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பாபு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் மது பிரவீன் மற்றும் அவரது நண்பர் லெனின் சென்று கொண்டிருந்தனர். அவர்களை பாபு தரப்பினர் வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கினர்.
இதில் காயமடைந்த மது பிரவீன், லெனின் ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மது பிரவீன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுண் போலீசார் பாபு, ரமேஷ், அருண், அரசு ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.