சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
தா.பழூர் அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொத்து தகராறு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி வடக்கு தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் பழனிச்சாமி (வயது 49), விவசாயி. இவரது சகோதரர் கொளஞ்சிநாதன். இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
சம்பவத்தன்று பழனிச்சாமிக்கு பாகம் பிரித்து கொடுக்கப்பட்ட இடத்திலிருந்த புளிய மரத்தில் கொளஞ்சிநாதன் தனது குடும்பத்தினருடன் புளியம்பழம் உலுக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
2 பேர் மீது வழக்கு
இதனை பழனிச்சாமி தட்டி கேட்டபோது கொளஞ்சிநாதன் மனைவி உஷாராணி, மகன் கிரிதரன் ஆகியோர் பழனிச்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த பழனிச்சாமியின் மகன் சூர்யா (15) என்பவரையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த பழனிச்சாமி, சூர்யாவை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.