சிறுமி கர்ப்பம் வாலிபர் உள்பட 2 பேர் மீது வழக்கு

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தேனி அருகே பூதிப்புரம் வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்த அழகர் சாமி மகன் பிரகாஷ் (வயது 21). இவர் கடந்த ஆண்டு 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பழகினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சிறுமியை இளம்வயது திருமணம் செய்து தனது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் சிறுமி 9 மாத கர்ப்பிணியானார். இதையடுத்து சிறுமி பிரசவ கால சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வந்தார். அப்போது இந்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து தேனி அனைத்து மகளிர் போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தனக்கு குழந்தை திருமணம் நடந்தது குறித்தும், தான் கர்ப்பிணியாக இருப்பது குறித்தும் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும், அந்த சிறுமி போலீசாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின் பேரில், சிறுமியை திருமணம் செய்த பிரகாஷ், அவருடைய தாய் வீரம்மாள் ஆகிய 2 பேர் மீதும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.