போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு-4 பேர் மீது வழக்கு


போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு-4 பேர் மீது வழக்கு
x
திருச்சி

திருச்சி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இரும்பு வியாபாரி

திருச்சி வரகனேரி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 65). இரும்பு வியாபாரியான இவருக்கு சொந்தமான 52 சென்ட் காலி இடம் திருவெறும்பூர் அருகே எல்லக்குடி கிராமத்தில் உள்ளது. 14.06.1985 அன்று அந்த நிலத்தை ஒருவரிடம் இருந்து பன்னீர்செல்வம் வாங்கி, தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருந்தார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், பன்னீர்செல்வம் எல்லக்குடிக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத சிலர், பன்னீர்செல்வத்தின் நிலத்தை சுற்றி புதிதாக வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உடனே அவர், இதுபற்றி அவர்களிடம் சென்று கேட்டுள்ளார்.

ஆள்மாறாட்டம்

அப்போது, அந்த நிலம் திருச்சி பெரியகம்மாள தெருவை சேர்ந்த பிரடி (56) என்பவருக்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் திருவெறும்பூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஆவணங்களை வாங்கி பார்த்துள்ளார். அப்போது, பன்னீர்செல்வம் பெயரில் போலி ஆதார் ஆவணங்களை தயாரித்து, ஒருவரை பன்னீர் செல்வம்போல் ஆள்மாறாட்டம் செய்ய வைத்து, நிலப்பத்திரம் தொலைந்து விட்டதாக கூறி அதே நிலத்தை தனது பெயருக்கு பிரடி 18-7-2022 அன்று பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. அத்துடன், பிரடி தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்தபோது திருச்சி அரியமங்கலம் இலந்தைபட்டி மோதிலால் தெருவை சேர்ந்த பிரகாஷ் (42), மலையப்பநகர் காமராஜர் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி (51) ஆகியோர் சாட்சி கையொப்பம் போட்டுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அசல் பத்திரம் தொலைந்ததாக புகார்

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மிக நேர்த்தியாக இந்த மோசடியில் பிரடி செயல்பட்டது அம்பலமானது. அதாவது, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பிரடி, பன்னீர்செல்வத்தின் நிலத்தை அபகரிப்பதற்காக திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக பன்னீர்செல்வத்தின் ஆதார் கார்டு போல், மற்றொரு நபருக்கு அதே பெயரில் போலி ஆதார் கார்டு ஒன்றை பிரடி தயாரித்துள்ளார். அதன் பின்னர் அந்த நிலத்தின் சர்வே நம்பர் உள்ளிட்ட தகவல்களை புரோக்கர்கள் மூலம் சேகரித்துள்ளார். பின்னர் அவர், அந்த வேறொரு நபரை பன்னீர்செல்வம் போல் ஆள்மாறாட்டம் செய்யவைத்து, தனது அசல் நில பத்திரம் மணப்பாறை மாரியம்மன் கோவில் பகுதியில் தொலைந்து விட்டதாக மணப்பாறை போலீசில் புகார் செய்துள்ளார்.

4 பேர் மீது வழக்கு

போலீசார் வழக்குப்பதிவு செய்து அசல் பத்திரங்கள் கிடைக்கவில்லை என்று சான்று கொடுக்கவே, அதை பயன்படுத்தி, பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் நகல் பத்திரம் வாங்கியுள்ளார். பின்னர், பன்னீர்செல்வம் தனக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுத்ததாக காட்ட, அதே நபரை ஆள் மாறாட்டம் செய்ய வைத்து திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயருக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரடி, பன்னீர்செல்வம் போல் ஆள்மாறாட்டம் செய்த நபர், பிரகாஷ், சுப்புலட்சுமி ஆகிய 4 பேர் மீது திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1 கோடி நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story