வீட்டு முன்பு ஆசிரியை தர்ணா போராட்டம்: பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலன் உள்பட 4 பேர் மீது வழக்கு


வீட்டு முன்பு ஆசிரியை தர்ணா போராட்டம்:  பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலன் உள்பட 4 பேர் மீது வழக்கு
x

சேலத்தில் வீட்டு முன்பு ஆசிரியை தர்ணா போராட்டம் நடத்திய விவகாரத்தில் பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

ஆசிரியை தர்ணா

ஆத்தூர் அருகே உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சேலம் கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவில் உள்ள கோகுல் (27) என்பவரின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் கோகுல் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுபற்றி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் கோகுல் மீது புகார் செய்தார்.

பலாத்காரம்

அதில், நான் ஆத்தூரில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தபோது கோகுலுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் என்னை காதலித்தார். கடந்த 2019-ம் ஆண்டு சென்னைக்கு வரவழைத்து ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்தேன். அதன்பிறகு கருவை கலைத்துவிட்டார். இதையடுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன். இதனால் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டினார். பின்னர் கணவன், மனைவியாக வாழ்ந்தோம்.

ஆனால் சில நாட்களில் சாதி பெயரை சொல்லி திட்டியதோடு என்னுடன் வாழமுடியாது என்று கூறி விட்டார். மேலும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரரும் திட்டினர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

4 பேர் மீது வழக்கு

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, பலாத்காரம் செய்து ஏமாற்றிய கோகுல் மற்றும் அவரது தாய் ரேணுகா, தந்தை ரவி, சகோதரர் சந்தோஷ் ஆகிய 4 பேர் மீது எஸ்.சி., எஸ்.டி பிரிவு உள்பட 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story