அடகு கடைக்காரரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


அடகு கடைக்காரரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x

தா.பழூர் அருகே அடகு கடைக்காரரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அரியலூர்

அடகு கடைக்காரர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன் (வயது 37). இவர் உதயநத்தம் கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு திடீரென சத்தம் கேட்டதால் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது சிலர் அவரது வீட்டின் முன்பு நின்று உருட்டுக்கட்டைகளுடன் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுக்கொண்டு இருந்தனர். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் ஏன் இங்கு நின்று சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் யார் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

4 பேர் மீது வழக்கு

இதையடுத்து, கார்த்திகேயனின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து அங்கு சண்டை போட்டுக் கொண்டிருந்த நபர்கள் கையில் வைத்திருந்த கட்டையை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களில் ஒருவரது மோட்டார் சைக்கிள் பழுது ஏற்பட்டதால் அங்கேயே நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தழுதாழைமேடு பகுதியை சேர்ந்த ஜெயமணி, நெடுமாறன், கங்கைகொண்டசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், நெடுமாறன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story