பா.ஜனதா- காங்கிரஸ் பிரமுகர்கள் 53 பேர் மீது வழக்கு; 5 பேர் கைது
நாகர்கோவிலில் நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக பா.ஜனதா- காங்கிரஸ் பிரமுகர்கள் 53 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக பா.ஜனதா- காங்கிரஸ் பிரமுகர்கள் 53 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இரு கட்சியினர் மோதல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து நாகர்கோவிலில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அருகில் உள்ள பா.ஜனதா அலுவலகம் வரை இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட பா.ஜனதா அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த சத்தம் கேட்டு பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து வந்த பா.ஜனதா கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, பெரும் மோதலாக உருவெடுத்தது. இரண்டு தரப்பினரும் மாறி, மாறி கல்வீசி தாக்கினர். இதில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் லேசான காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பா.ஜனதா கட்சியினர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மறியல் போராட்டம்
இந்த மோதல் சம்பவத்தின்போது பா.ஜனதா மாவட்ட அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. காங்கிரஸ் கட்சி கொடிகளும் எரிக்கப்பட்டன.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூடுதல் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், ராஜேந்திரன், துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
53 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பா.ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன் கொடுத்த புகாரின்பேரில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டைசன், நவீன்குமார், லாரன்ஸ், டைட்டஸ், விமல், ஜோன் மற்றும் கண்டால் தெரியும் 25 பேர் என மொத்தம் 31 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் டைசன் மற்றும் ஜோஸ்லின் ஜெனின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் காங்கிரசை சேர்ந்த 5 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். படுகாயம் அடைந்த லாரன்ஸ் மற்றும் டைட்டஸ் ஆகிய 2 பேரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கொடுத்த புகாரின்பேரில் பா.ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ், பொதுச்செயலாளர் ஜெகநாதன், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜா, நிர்வாகிகள் மகாதேவன்பிள்ளை, மாதவன், கிருஷ்ணன், ஆறுமுகம் மற்றும் கண்டால் தெரியும் 15 பேர் என மொத்தம் 22 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் பா.ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜா, குமரி மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 11-ந் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டுபோய் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 48 பேரை கைது செய்ய 5-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மறியல் போராட்டம் நடத்தியது தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சியினர் 31 பேர் மீதும், பா.ஜனதா கட்சியினர் 22 பேர் மீதும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாகுபாடின்றி நடவடிக்கை
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-
நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. யாராக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. இதில் அரசியல் கட்சி பாகுபாடு இன்றி குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேரும், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜனதா கட்சியினரும் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.