துணை தாசில்தார், சார் பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு


துணை தாசில்தார், சார் பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
x

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக துணை தாசில்தார், சார் பதிவாளர் உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

போலி வில்லங்க சான்றிதழ்

பெரம்பலூரை அடுத்த அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விவசாயி. இவரது மனைவி சாந்தி(வயது 50). இவருக்கு செங்குணம் கிராமத்தில் 20 சென்ட் நிலமும், அதற்கு தனிப்பட்டாவும் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணனின் உறவினர்களான விஜயபுரத்தை சேர்ந்த ராஜூ மற்றும் அருமடலை சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் வாலிகண்டபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சாந்தியின் நிலத்தின் மீது போலியாக வில்லங்க சான்றிதழ் பெற்று, அதனைக்கொண்டு பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்து தனிப்பட்டாவை ராஜூ பெயரில் கூட்டுப்பட்டாவாக பெற்றுள்ளனர்.

பத்திரப்பதிவு

இந்த கூட்டுப்பட்டாவை வைத்து சாந்திக்கு சொந்தமான இடத்தில் 5 சென்ட் நிலத்தை வாலிகண்டபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் ராஜூவும், வாசுதேவனும் சேர்ந்து வாசுதேவன் பெயருக்கு கடந்த 2017-18-ம் ஆண்டில் கிரயம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு அப்போது சார் பதிவாளராக பணியாற்றிய சிவனேசன், ஆவண எழுத்தர் சின்னசாமி ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் தனது பட்டா குறித்த நிலையை அறிந்து கொள்ளும் வகையில் சாந்தி தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் பொது தகவல் அதிகாரி மூலம் கடந்த 13.5.2021 அன்று பதில் பெற்றுள்ளார். அப்போது தனது 5 சென்ட் நிலத்தை போலி வில்லங்க சான்றிதழ் மூலம், போலி பட்டா பெற்று, பத்திரம் மூலம் பதிவு செய்த விவரம் தெரியவந்தது.

6 பேர் மீது வழக்கு

தனது நிலம் அபகரிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த சாந்தி, இது தொடர்பாக பெரம்பலூர் குற்றவியல் நீதிபதியிடம், தனது வழக்கறிஞர் மூலம் புகார் மனு அளித்தார். புகார் மனுவை ஏற்ற குற்றவியல் நீதிமன்றம் 3 மாதத்திற்குள் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் போலி வில்லங்க சான்றிதழ் அளித்த சார் பதிவாளர் பாலசுப்பிரமணி(தற்போது இவர் ஓய்வு பெற்றுவிட்டார்), போலி வில்லங்க சான்றிதழ் மூலம் தனிப்பட்டாவை கூட்டுப்பட்டாவாக மாற்றி தந்ததாக பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் அப்போது பணியில் இருந்த தலைமையிடத்து துணை தாசில்தார் துரைராஜ், போலியான ஆவணங்களை சரிபார்க்காமல் பத்திர பதிவு செய்த வாலிகண்டபுரம் சார் பதிவாளர் சிவனேசன், ஆவண எழுத்தர் சின்னசாமி மற்றும் ராஜூ, வாசுதேவன் ஆகிய 6 பேர் மீது பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story