திருக்கோவிலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பதிவு செய்த 7 பேர் மீது வழக்கு
திருக்கோவிலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பதிவு செய்த 7 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவர், மேலத்தாழனூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலைக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை கிரயம் பெற்று அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில் துரைசாமி இறந்ததையடுத்து மேலத்தாழனூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன்கள் முருகன், ஆறுமுகம், ஆமூர் கிராமத்தை சேர்ந்த வேலு மனைவி அலமேலு, டி. கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த வீரன், இவரது மகன்கள் நாராயணன், பிரபு, மகள் சங்கீதா ஆகியோர் ஒன்று சேர்ந்து போலியான வாரிசு சான்றிதழ் பெற்று திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மேலத்தாழனூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் ராஜாராம் என்பவருக்கு கிரையம் செய்து விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டி.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த இறந்து போன துரைசாமியின் பேரன் முருகன், விழுப்புரம் மாவட்ட பத்திரப்பதிவாளர் மலர்விழியிடம் புகார் கொடுத்துள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து விசாரணை நடத்திட கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு பரிந்துரை செய்தார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் சார் பதிவாளர் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் முருகன் உள்பட 7 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.