சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம் அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.30 லட்சம் நில மோசடி செய்ததாக சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.30 லட்சம் நில மோசடி செய்ததாக சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
நில மோசடி
சென்னை வேளச்சேரி வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (வயது 27). இவரின் தந்தை ஜீவானந்தத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தீயனூர் பகுதியில் 41 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தினை ஜீவானந்தம் குடும்பத்தினர் பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜீவானந்தம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனை அறிந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நிலத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி நில புரோக்கர்களான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சின்னநாகாச்சி முனியாண்டி மகன் அர்ச்சுணன், மென்னந்தி கிராமம் முனியாண்டி மகன் நாகராஜன், கோவை ஜோதிபுரம் சண்முகசுந்தரம் மகன் சுடலை முத்து ராஜா, போகலூர் சார்பதிவாளர் ராமமூர்த்தி, பத்திர எழுத்தர் போகலூர் முகம்மது அப்துல்வகாப், சாட்சிகள் மென்னந்தி கருப்பன் மகன் சேதுராமன், சின்னநாகாச்சி சாத்தன் மகன் முனியாண்டி, பரமக்குடி நாகசுந்தரம் மகன் சூர்யபிரகாஷ் ஆகியோர் கூட்டு சேர்ந்து ஜீவானந்தம் போல் கோவை சுடலை முத்துராஜாவை வைத்து ஆள்மாறாட்டம் செய்து ஆதார் அட்டையில் திருத்தம் செய்து போலியான ஆதார் உருவாக்கி கடந்த ஆண்டு பத்திர பதிவு செய்து கொண்டார்களாம்.
8 பேர் மீது வழக்கு
இந்த ஆவணத்தை வைத்து மேற்கண்ட சூர்ய பிரகாசிற்கு பொது அதிகார ஆவணம் உருவாக்கி நிலத்தை மோசடி செய்து விட்டார்களாம். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இதுபற்றி அறிந்த சங்கர்கணேஷ் இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து சார்பதிவாளர் உள்பட 8 பேரையும் தேடிவருகின்றனர்.