மகனுக்காக தயாரித்த சிறிய ரக மொபட்டில் சோதனை ஓட்டம் நடத்திய மெக்கானிக் மீது வழக்கு


மகனுக்காக தயாரித்த  சிறிய ரக மொபட்டில் சோதனை ஓட்டம் நடத்திய மெக்கானிக் மீது வழக்கு
x

மகனுக்காக சிறிய ரக மொபட்டில் சோதனை ஓட்டம் நடத்திய மெக்கானிக் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம்

ஓமலூர்,

சிறிய ரக மொபட்

ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி நாச்சினம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). இவர், மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுவர்கள் ஓட்டக்கூடிய பேட்டரி மோட்டார் சைக்கிளை பார்த்து தங்கராஜிடம் அவரது மகன் மோகித் (வயது 7), தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கேட்டுள்ளான். மோட்டார் மெக்கானிக்கல் அனுபவமுள்ள தங்கராஜ் தானே தனது மகனுக்கு 'ரேஸ் பைக்' வடிவிலான மொபட்டை தயாரித்து தர முடிவு செய்தார். இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழைய மொபட்டை விலைக்கு வாங்கி கஷ்டப்பட்டு அதனை சிறுவர்கள் ஓட்டும் வகையில் வடிவமைக்க தொடங்கினார். அதன்பிறகு 'ரேஸ் பைக்' வடிவிலான சிறிய மொபட் தயாரித்து அதனை தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

சோதனை ஓட்டம்

இந்த நிலையில், ஓமலூர் அருகே சாலையில் சிறுவன் மோகித் மொபட்டை ஓட்ட அவரது தந்தை தங்கராஜ் பின்னால் அமர்ந்து சோதனை ஓட்டம் சென்று பார்த்தனர். இதை அவர்களது உறவினர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதே விதிமுறை மீறலாகும். ஆனால் சிறுவன் மொபட் ஓட்டுவதற்கு அவரது தந்தையே உறுதுணையாக இருந்துள்ளது சர்ச்சையை கிளப்பியது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் இதுகுறித்து தீவட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில்,'மெக்கானிக் தங்கராஜ் பழைய மோட்டார் சைக்கிள் ஒன்றை வைத்து புதிதாக பைக் மாடலில் மோட்டார் சைக்கிளை உருவாக்கி 7 வயதான தனது மகனுக்கு அந்த மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அந்த காட்சி வைரலாகி உள்ளது. இதை பார்க்கும் சிறுவர்களும் இதேபோன்று அபாயகரமான செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகாரின் பேரில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தங்கராஜ் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story