சுடுகாட்டில் மொட்டை அடித்த காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு
பிரதமர் மோடி உருவபடத்தை வைத்து சுடுகாட்டில் மொட்டை அடித்த காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
பிரதமர் மோடி உருவபடத்தை வைத்து சுடுகாட்டில் மொட்டை அடித்த காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மொட்டை அடித்த காங்கிரசார்
மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதை கண்டித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒழுகினசேரி சுடுகாட்டில் மொட்டை அடிக்கும் போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியினர் 3 பேர் மொட்டை அடித்தனர். அப்போது பிரதமர் நரேந்திரமோடி படத்தையும் கையில் வைத்திருந்தனர்.
வழக்கு பாய்ந்தது
இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடியை அவமானப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி வடசேரி போலீஸ் நிலையத்தில் பா.ஜனதாவினர் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.